'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக மக்களவையில் விளக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தின் போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக கூட்டத் தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக சிறப்பு விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரங்கள் குறித்து இரு அவைகளிலும் தலா 16 மணிநேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மக்களவையில் இன்று தொடங்கிய சிறப்பு விவாதத்தில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தார். 

அப்போது பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவின் அதிநவீன ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத அமைப்புகள் அழித்து தகர்க்கப்பட்டதாக கூறினார். தாக்குதலில் 100 பயங்கரவாதிகள், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்கும் நடவடிக்கை 22 நிமிடங்களில் முடிக்கப்பட்டதாக பெருமித்துடன் குறிப்பிட்ட அவர், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், அவர்கள் ஏவிய டிரோன்களை இந்திய ஏவுகணைகள் தாக்கி அழித்ததாகவும் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் எஸ்.400, ஆகாஷ் ஏவுகணை அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டதாக கூறிய ராஜ்நாத்சிங், பாகிஸ்தானால் இந்தியாவில் உள்ள எந்தவொரு இலக்கையும் தாக்க முடியவில்லை எனவும் ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Night
Day