மகளிர் செஸ் உலக கோப்பை : திவ்யா தேஷ்முக் சாம்பியன்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்ஜியாவில் நடைபெற்ற ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, சீனா உள்பட 46 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

தகுதிச்சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், அரையிறுதி சுற்றில், இந்திய வீராங்கனையும், சர்வதேச கிராண்ட் மாஸ்டருமான 19 வயதான திவ்யா தேஷ்முக், சீன வீராங்கனை சோங்கி டேனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முதல் வீராங்கனையாக முன்னேறினார். 

இதேபோல், மற்றொரு இந்திய வீராங்கனையான கோனேரு ஹம்பி, சீனாவின் லெய் டிங்ஜீயை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் பிடே செஸ் உலகக்கோப்பை வரலாற்றில் 2 இந்திய வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இதுவே முதல்முறையாகும்.

இந்தநிலையில், கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற இறுதி போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகளான கொனேரு ஹம்பி -  திவ்யா தேஷ்முக் ஆகியோர் மோதினர். இந்த போட்டி டிராவில் முடிந்ததால் இருவருக்கும் தலா அரைப் புள்ளிகள் வழங்கப்பட்டன. பின்னர் 27ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது சுற்றும் டிராவில் முடிவடைந்தது. மீண்டும் இருவருக்கும் தலா அரை புள்ளிகள் பெற்று, சமநிலையில் நீடித்தனர்.

இதனால், வெற்றியாளரை தேர்வு செய்யும் டை பிரேக்கர் போட்டி இன்று நடைபெற்றது. இதில், கோனேரு ஹம்பியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். வெற்றி பெற்றதும் தனது தாயை ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் 19 வயதான திவ்யா தேஷ்முக், மகளிர் உலக கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக்கிற்கு 43 லட்ச ரூபாயும், 2-வது இடத்தை பிடித்த கோனேரு ஹம்பிக்கு 30 லட்ச ரூபாயும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day