எழுத்தின் அளவு: அ+ அ- அ
அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மோடி பிரதமராவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சண்டிகர் மாநிலம் மணிமஜ்ரா நகர் ஷிவாலிக் கார்டன் பகுதியில் 24 மணி நேர குடிநீர் விநியோக திட்டத்தை அவர் இன்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய அமித் ஷா, எதிர் கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், ஆனால் 2029லும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் என்று கூறினார். தற்போதுள்ள ஆட்சி நீடிக்காது என்று எதிர்க் கட்சியினர் தொடர்ந்து கூறி வருவதாக தெரிவித்த அமித் ஷா, இந்த ஆட்சிக் காலத்தை நிறைவு செய்வது மட்டுமின்றி, அடுத்தமுறையும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று உறுதிபட தெரிவித்தார். எதிர்கட்சியினர் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்து எதிர்கட்சியாக முறையாக செயல்படுவது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக் கொண்டார்