விடிய! விடிய! பிரியாணி திருவிழா - வெளுத்துக்கட்டிய பக்தர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நடைபெற்ற பிரியாணி திருவிழாவில் 2 ஆயிரத்து 500 கிலோ பிரியாணி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டிசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று பிரியாணி திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரியாணி திருவிழாயொட்டி, பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதமிருந்து, பால்குடம் எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முனியாண்டிவிலாஸ் ஹோட்டல் நடத்திவருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் சுவாமிக்கு பலியிடப்பட்டது. இதை தொடர்ந்து ஆடுகள் மற்றும் கொழிகளை வைத்து 2 ஆயிரத்து 500 கிலோ பிரியாணி அரிசியில் 20க்கும் மேற்பட்ட அண்டாக்களில் அசைவ பிரியாணி தயார் செய்யப்பட்டது. பிரியாணி தயார் ஆனதையடுத்து, காலை 5 மணிக்கு கோவிலில் உள்ள கருப்பசாமிக்கு படையிலிடப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நீண்ட நேரம் காத்திருந்து பிரியாணியை சாப்பிட்டனர். 

இந்த பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது இந்த பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதில் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு பிரியாணியை சாப்பிட்டு மகிழ்ந்தனர். 

Night
Day