போராட்டம்! புறக்கணிப்பு! பொதுமக்கள் இன்றி நடைபெற்ற கிராம சபை கூட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசு தின விழாவை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களின் போராட்டங்களால் பல இடங்களில் கிராம சபை கூட்டங்கள் முடங்கின.

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட திண்டுக்கல் தொகுதி திமுக எம். பி வேலுசாமி யிடம் சரமாரியாக குற்றச்சாட்டுகளை பெண்கள் அடுக்‍கினர். தங்களது ஊராட்சியில் கழிவு நீரோடை, சாலை, தெரு விளக்கு வசதி இல்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பெண்கள் முன்வைத்தனர். நான்கரை வருடங்களுக்கு பின்பு  தன்னை பொதுமக்களிடம் சிக்க வைத்து விட்டதாக தன்னை அழைத்து வந்த திமுக நிர்வாகிகளை கடிந்தவாறு தனது காரில் ஏறி வேலுசாமி சென்றதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் நன்மங்கலம் முதல்நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்‍கோரி பெண் ஒருவர் அமைச்சரிடம் கேட்ட போது, அந்தப் பெண்ணை உதாசீனப்படுத்தியதோடு, நீ ஓட்டு போட வேண்டாம் என அமைச்சர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தங்களது செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சியை கலைத்துவிட்டு அதனை திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என கூறி பொதுமக்‍கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கையில் பதாகைகளை ஏந்தி தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மகாதானபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் இன்றி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  தலைவர் பிரேமலதா மற்றும் அரசு ஊழியர்கள், அங்கன் வாடி ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதேபோன்று சிந்தலவாடி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர், செயலாளர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக கூறி காரசார விவாதத்தில் ஏற்பட்டது. 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே அம்மாபட்டி கிராமத்தில் ஊராட்சி தலைவர் சின்ன பாண்டி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்கு, சாக்கடை மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லை என்று கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பஞ்சாயத்தில் ஒரு கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டி பொதுமக்கள், இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த களியனூர் ஊராட்சியில் தலைவர் ரவி குழந்தைவேல் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பள்ளிபாளையம் அருகே சாய கழிவு பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்காததால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் வாதவனேரி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்திற்கு தேவையான சாலைவசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட எந்த வசதியையும்  செய்து தராத நிலையில், கிராம பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், வேளானந்தல் கிராமத்தில் பொதுமக்‍களுக்‍கு தகவல் தராமல் பெயரளவுக்‍கு கிராமசபை கூட்டம் நடத்தியுள்ளனர். இங்குள்ள ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த படவேட்டாள். இவரது கணவர் கண்ணன். இவர் பசுங்கரை ஊராட்சியின் செயலாளராக உள்ளார். ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதை எதிர்த்து ஊர் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட யாருக்கும் எந்தவித தகவலும் அளிக்காமல், யாரும் இல்லாத வேறு ஒரு இடத்தில் ஒப்புக்‍கு கிராம சபை கூட்டம் நடத்தியதாக ஊர் மக்கள் குற்றச்சாட்டினர்.

பல இடங்களில் பொதுமக்‍களின் எதிர்ப்புக்‍கு பயந்து கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. தங்களது நலனை பாதுகாக்‍கவோ, வளர்ச்சி பணிகளை செய்யவோ எந்த நடவடிக்‍கையும் எடுக்‍காமல் விளம்பர ஆட்சியில் புறக்‍கணிப்பதாக பொதுமக்‍கள் புலம்பினர். 

Night
Day