சபரிமலை ஐயப்பன் கோயில் நான்கரை கிலோ தங்கம் மாயமான வழக்கு - மேலும் 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நான்கரை கிலோ தங்கம் மாயமான வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சென்னையை சேர்ந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உட்பட 2 பேரை சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில், கடந்த 2019 ஆம் ஆண்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. கருவறை முன்பாக இருந்த துவாரபாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. அப்போது, தங்கமுலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கும் போது, துவாரபாலகர் சிலைகளின் தங்க கவசத்தில் இருந்து சுமார் நான்கரை கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. மேலும், கருவறை கதவுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டதும் தெரியவந்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான புகாரின் பேரில், அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.

இந்நிலையில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சென்னையை சேர்ந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி மற்றும் பெங்களூரு பல்லாரியைச் சேர்ந்த நகை கடை உரிமையாளர் கோவர்தன் ஆகிய 2 பேரை சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்தனர். மேலும், ஐயப்பன் கோயிலில் நடந்த தங்க திருட்டில் சர்வதேச பழங்கால பொருட்கள் கடத்தல் கும்பலின் தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது.

Night
Day