ரூ.5 லட்சத்திற்கு கற்பூரம்... 10,000 ஆடுகள் நேர்த்திக்கடன்... 18 கிராம மக்களின் விநோத வழிபாடு...

எழுத்தின் அளவு: அ+ அ-

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரியக்கா-பெரியக்கா கோயிலில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளனர் கிராம மக்கள். இதுமட்டும் இல்லாமல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர் பக்தர்கள்...சிறப்பாக நடைபெற்ற திருவிழா குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மருதேரி கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அரியக்காபெரியக்கா கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தெலுங்கு வருட பிறப்பு நாளில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில், கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 18 கிராம மக்கள் சாரை சாரையாக பங்கேற்று திருவிழாவை  கொண்டாடினர்.

திருவழாவையொட்டி, மத்தூர் அடுத்த எட்டிப்பட்டி கிராமத்திலிருந்து சுவாமி சிலைகளை பெட்டியில் வைத்து கொடமாண்டப்பட்டி, பாளேதோட்டம், போச்சம்பள்ளி வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். அவ்வாறு சாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்து வரும் போது, வழியேற பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, வழிபாடு நடத்தினர்.

அதனை தொடர்ந்து கரடியூரில் உள்ள பொன்னியம்மன் கோயிலில் உள்ள ராட்சத ஊஞ்சலில் வைத்து சுவாமியை தாலாட்டி களைப்பாற வைத்தனர். மூன்று மணி நேரம் கழித்து அங்கிருந்து சுவாமி சிலையை மீண்டும் தலையில் சுமந்தபடி, ஆற்றை கடந்து அரியக்காபெரியக்கா கோயிலை வந்தடைந்தனர்.

இத்திருவிழாவில் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் கற்பூரம்‌ கொளுத்தப்பட்டு, அகரம் கிராமத்தில் இருந்து களிமண்ணால் செய்யப்பட்ட குதிரை சிலை மற்றும் அரியக்கா,பெரியக்கா கருப்பண்ணன் உள்ளிட்ட சாமிகளின் ஊர்வலம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து இரவு முழுவதும் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை சுவாமிக்கு பலியிட்டனர்.  அரியக்காபெரியக்கா சுவாமியை கூடையில் வைத்து கோவிலுக்குள் வைப்பதால் சுவாமியை இதுவரையில் பக்தர்கள் பார்த்ததில்லை என்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.

Night
Day