பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற கருட சேவை உற்சவம், குண்டம் இறங்கும் திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற கருட சேவை உற்சவம், குண்டம் இறங்கும் திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அஷ்டபுஜ பெருமாள் பல்வேறு மலர்கள் அலங்கரிக்கப்பட்டு ரோஸ் நிற பட்டுடுத்தி திருஆபரணங்கள் அணிந்து கருட சேவை உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலில் இருந்து புறப்பட்ட கருட சேவை மாடவீதி வழியாக வலம் வந்தது. வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஐயாறப்பர் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏழூர் சப்தஸானம் விழா வெகு விமரிசையாக தொடங்கியது. அறம் வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பர் கண்ணாடி பல்லக்கிலும், சுயசாம்பிகை - நந்திகேஸ்வரர் வெட்டிவேர் பல்லாக்கில் புறப்பட்டு ஏழு ஊர்களுக்கு புறப்பட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில் சப்தாவர்ணம் புறப்பாட்டில் திரளான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அதனையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும் அம்பாளும்  எழுந்தருளி கோயிலை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் சாமி, அம்பாள் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஊர் காத்த மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். காப்பு கட்டி விரதம் இருந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், கைக்குழந்தையுடன் நேர்த்திக்கடனை செலுத்தினர். 

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மலர், மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் தேரடி மண்டபத்தில் எழுந்தருளினார். பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ராஜா வீதிகளின் வழியே தேர் வலம் வர வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த கல்லாரில் ஹலிபத்துஷெய்கு முகையதின் ரிபாயி ஒலியுல்லாஹ்வின் 425ம் ஆண்டு கந்தூரி திருவிழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. மின் விளக்குக்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு  சந்தனம் பூசும் வைபோகம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து வண்ணமிகு வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தில் ஸ்ரீ கூத்தாண்டவர் கோயில் 202 ஆம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் தாலி அறுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 33 அடி உயரம் கொண்ட கூத்தாண்டவர் தேரை கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இறுதியாக திருநங்கைகள் ஏற்கனவே கட்டிய தாலியை அறுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருநங்கைகள் தங்களின் தாலிகளை அறுத்து, வளையல்களை உடைத்து, ஒப்பாரி வைத்து அழுதனர். 

Night
Day