பங்குனி உத்திரம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகத்திலுள்ள பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு தேரோட்டம், குடமுழுக்கு நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காவடி உற்சவம் நடைபெற்றது. பங்குனி உத்திர விழாவையொட்டி முருகப் பெருமானுக்கு நாள்தோறும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான காவடி உற்சவத்தில் பக்தர்கள் காவடி சுமந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். 

பெரம்பலூரில் உள்ள மதனகோபால சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இந்தாண்டுக்கான பங்குனி உத்திர கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், அதற்காக கோயிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உலக நன்மை வேண்டி காட்டேரி அம்மனுக்கு நடைபெற்ற பூஜையில் பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் தங்கள் நிலங்களில் விளைந்த தானியங்களை கொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் மேள தாளங்கள் முழங்க நடைபெற்ற வழிபாட்டில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள பழமை வாய்ந்த விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. சோத்துக்கண்ணியில் உள்ள விநாயகர், காசி விஸ்வநாதர், மாரியம்மன் உள்ளிட்ட உற்சவர்கள் ஆலயங்களில் பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரியில் திரளானோர் பங்கேற்று பால்குடம் ஏந்தி சுவாமியை வழிபட்டனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூடிரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் உற்சவருக்கு தீர்த்தங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்ட பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபட்டனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 21 அடி உயர ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கோயிலில் பல்வேறு ஹோமங்களும், யாகங்களும் நடைபெற்றன. பின்னர் கல்சங்கள் மேல் தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றன. இதில் திரளானோர் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் முருகனுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் பல்வேறு பூக்களை கொண்டு செய்யப்பட்ட அலங்காரத்தில் முருகர் ராஜ யோகத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்மேடில் உள்ள தீபாஞ்சாலியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. பழமை வாய்ந்த இக்கோயிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. பின்னர் வேதங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றன. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

lராமநாதபுரம் மாவட்டம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தீப்பந்த போட்டி நடைபெற்றது. கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கிய பங்குனி உத்திர திருவிழாவிற்காக, தினமும் கலை நிகழ்ச்சிகளும், சிறப்பு சொற்பொழிவுகளும் கோயிலில் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற தீப்பந்த போட்டியில் ஆண்களும், பெண்களும் பங்கேற்று தீப்பந்தத்தை சுழற்றி விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. 

பழநி முருகன் கோயிலில் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அருள்மிகு முத்துக்குமாராசாமி வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட  திருத்தேரில், பழனி அடிவாரம் வடக்குகிரி வீதியில் இருந்து நான்கு கிரிவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்து முருகப்பெருமானை வழிபட்டனர். 




Night
Day