எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்,ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
ஏழுமலையானுக்கு 11 மாதங்கள் நிறைவு பெற்றவுடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாகும். முதலில் வருவது வருடாந்திர பிரம்மோற்சவம் என்றும் இரண்டாவதாக வருவது நவராத்திரி பிரம்மோற்சவம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது.
தொடர்ந்து நடைபெற்ற முதல் நாள் பிரம்மோற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமி பெரிய சேஷ வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய சேஷ வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர். முதல் நாள் பிரம்மோற்சவ விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி. பி.ராதாகிருஷ்ணன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபாடு செய்தனர்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான கருட சேவை வரும் 28-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. கருடசேவையை முன்னிட்டு, மலைப்பாதைகளில் இருசக்கர வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.