எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ்நாடு அரசின் எரி சக்தித்துறை செயலாளர் பீலா வெங்கடேசன் உடல் நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எரிசக்தித் துறையின் செயலாளராக பணியாற்றி வந்த 56 வயது பீலா வெங்கடேசன், உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் கொரேனா கால கட்டத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் மேற்கொண்ட கொரானா தொற்று தடுப்பு மற்றும் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
அதற்கு முன்னதாக செங்கல்பட்டு துணை ஆட்சியராகவும், மீன்வளத்துறையின் திட்ட இயக்குநராகவும் பீலா வெங்கடேசன் பதவி வகித்தார். மேலும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராகவும், இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தில், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது தந்தை வெங்கடேசன் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாயார் ராணி சாத்தான்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி விகித்தார். இந்த நிலையில் பீலா வெங்கடேசன் மறைவுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.