சூரபத்மனை வதம் செய்த ஜெயந்தி நாதர் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. கடற்கரையில் சூரபத்மனை ஜெயந்திநாதர் வதம் செய்ததை பக்தி கோஷம் விண்ணை பிளக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். 
  
முருகன் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 2 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் கடற்கரையில் இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. கடற்கரையோரம் அலைகடலென திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர், முதலில் யானை முகம் கொண்ட தாரகா சூரனையும், இரண்டாவதாக சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார்.

இதனை தொடர்ந்து தன் சுய முகம் கொண்ட சூரபத்மனை தனது வெற்றி வேலால் ஜெயந்திநாதர் வதம் செய்தார். அப்போது கடற்கரை முழுவதும் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா, அரோகரா முழக்கம் விண்ணை பிளந்தது. தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த சூரபத்மனை வேலால் வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி சுவாமி ஜெயந்திநாதர் ஆட்கொண்டார்.

பகைமையை மாற்றி ஞானம் பெறுவதே சஷ்டி விரதத்தின் சிறப்பு என்றும், சிங்கமுக சூரனை வெல்வது கன்மத்தை ஒழிப்பதாகவும், சூரபத்மனை வெல்வது ஆணவத்தை அழிப்பதாகவும் பக்தர்கள் கருதுகின்றனர். இதன்காரணமாக தலையா? கடல் அலையா? என்று பிரமிக்கும் வகையில் நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு தரிசித்த பக்தர்கள் கடலில் புனித நீராடியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

varient
Night
Day