17 வயது சிறுவன் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் ஏற்பட்ட இருதரப்பு மோதலில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்க முயன்ற சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம், பாப்பாக்குடியில்  இருதரப்பினரிடையே ஏற்பட்ட திடீர் மோதலையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். அப்போது, தகராறு செய்த இரண்டு சிறுவர்களின் ஒருவரான 17 வயது மதிக்கத்தக்க சிறுவன், பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஒருவரை அரிவாளால் தாக்க முயன்றதாக தெரிகிறது. இந்தத் தாக்குதலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவி ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்தும் சிறுவன் தொடர்ந்து அச்சுறுத்தியதால் வேறு வழியின்றி உதவி ஆய்வாளர் தனது துப்பாக்கியால் அந்தச் சிறுவனின் காலில் சுட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு   அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து பாப்பாக்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சிறுவன் உட்பட இரண்டு சிறுவர்கள் மீது 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் முருகனை பணி செய்யவிடாமல் தடுத்தது, காவல் சீருடையில் இருக்கும் அதிகாரி ஒருவரிடம் அத்து மீறியது, சக்தி குமார் என்பவரை தாக்க முயற்சித்தது, அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம்  அவதூறாக பேசியது, பெண் வன்கொடுமை வழக்கு மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை வழக்கு என இரண்டு வழக்குகள் 11 பிரிவுகளின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Night
Day