வைர வியாபாரிக்கு ஷாக் கொடுத்த கும்பல்... தூத்துக்குடியில் தட்டித் தூக்கிய தனிப்படை...

எழுத்தின் அளவு: அ+ அ-

வைர வியாரியிடம் கைவரிசை காட்டி சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர். திட்டம் தீட்டி கொள்ளையை அரங்கேறியது எப்படி ? போலீசாரின் பிடியில் கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்..

சென்னை அண்ணநகரை சேர்ந்தவர் வைரவியாபாரி சந்திரசேகர். இவர் வைரங்களை விற்பனை செய்வதற்கு தொழில்ரீதியாக நீண்ட நாள் பழக்கமானவரும், இடைத்தரகருமான ஆரோக்யராஜ் என்பவரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து வைரங்களை வாங்குவதற்காக ராகுல் என்பவரை இரண்டு நாட்களுக்கு முன்பு இடைத்தரகர் ஆரோக்யராஜ் அழைத்து வந்துள்ளார். சந்திரசேகரை அவரது வீட்டில் சந்தித்த ராகுல், வைரங்களை பார்த்து விலைகளை பேசி உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து வைரம் வாங்குவது தொடர்பான மற்ற விவரங்களை வெளியில் வைத்து பேசி கொள்ளலாம் என இடைத்தரகர் மற்றும் வைரம் வாங்க வந்த ராகுல் தரப்பினர் கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து வைரங்களை வாங்க வந்தவர்கள் திட்டமிட்டபடி வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். வைரங்களை விற்பதற்காக சந்திரசேகரை, இடைத்தரகர் ஆரோக்யராஜ் வடபழனியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். அறைக்கு சென்றபோது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் சந்திரசேகரை தாக்கி அவரை கட்டிப்போட்டு விட்டு வைரத்தை பறித்து விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

அறைக்கு சென்ற வைர வியாபாரி சந்திரசேகர் வெகுநேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஃசோபாவில் சந்திரசேகர் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து வைர வியாபாரி சந்திரசேகர் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில், வைரங்களை திருடி சென்ற 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொள்ளை கும்பல் தூத்துக்குடிக்கு செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சென்னையில் வைர வியாபாரியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சென்னையைச் சேர்ந்த ஜான் லாயட், விஜய், ரத்தீஷ், அருண்பாண்டியராஜன் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படை போலீசார் சிப்காட் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணயில் கொள்ளைக் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது அருண்பாண்டிராஜன் எனும் லண்டன் ராஜா என்பது தெரியவந்துள்ளது. காயல்பட்டினத்தில் உள்ள வியாபாரியிடம் ஒருவரிடம் வைரத்தை விற்பனை செய்ய எடுத்து சென்றபோது கொள்ளை கும்பல் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதைத்தொடர்ந்து சென்னையிலிருந்து விமானம் மூலம் தனிப்படையை சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் சிப்காட் காவல் நிலையம் சென்று அங்கிருந்து, கொள்ளை கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை விசாரணைக்காக விமானம் மூலம் சென்னை அழைத்து சென்றனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட வைரம், தங்க நகைகள், கொள்ளையடித்து விட்டு தப்பிக்க பயன்படுத்திய வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ராகுல் மற்றும் இடைத்தரகர் ஆரோக்யராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திரைப்படங்களில் வருவது போன்று திட்டம் தீட்டி வைர வியாபாரியை கட்டிப்போட்டு வைரங்களை திருடி சென்ற சம்பவம் வியாபரிகளிடையே பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day