மக்களவை தேர்தலை புறக்கணித்த கிராமங்கள் - மக்களவை தேர்தல் 2024

எழுத்தின் அளவு: அ+ அ-

அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வாக்குப் பதிவை புறக்கணித்தனர். வாக்காளர்களின் புறக்கணிப்பால் பல இடங்களில் வாக்குச் சாவடிகள் வெறிச்சோடின.

தேனி மாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட அகமலை ஊராட்சியை சேர்ந்த 10 மலை கிராம மக்கள் சாலை வசதி கோரி 50 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கோரிக்கையை வலியுறுத்தி சோத்துப்பாறை அணை அருகே மலை கிராமத்திற்கு செல்லும் பாதையில் அமர்ந்து தேர்தலை புறக்கணிக்க போவதாக சாலை மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட சரவம்பாக்கம் கிராமத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள கல்குவாரியை மூடக் கோரி கிராம மக்கள் வாக்குப் பதிவை புறக்கணித்தனர். கிராம நுழைவாயில் அருகே கையில் கருப்பு கொடி ஏந்திய அவர்கள், ஓட்டு போட போக மாட்டோம், கல் குவாரியை மூட வேண்டும் என கோஷமிட்டு தேர்தலை புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே டி. புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள இந்திராநகர் காலனியில், வாக்குப் பதிவை புறக்கணித்து பட்டியல் இன மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாக்கடை, கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து, மக்களவை தேர்தலை புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கே கரிசல்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பெரும்பாலான மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வெறிச்சோடிய வாக்குச்சாவடிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் செய்தியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தஞ்சை அருகே இனத்துக்கான் பட்டி கிராமத்தில் 35 ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி, தேர்தலை ஒட்டு மொத்தமாக புறக்கணித்த அவர்கள், வாக்களிக்க செல்லாமல் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே வெவ்வயல்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் கிரஷரை நிரந்தரமாக மூடக் கோரி அப்பகுதி மக்கள் மக்களவை தேர்தலை புறக்கணித்தனர். வாயில் கருப்பு துணி கட்டியும் கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் எதிர்ப்பை தெரிவித்த கிராம மக்கள், கிரஷரை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட வலிய ஏலா கிராமத்தில், தேர்தலைப் புறக்கணித்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 80 ஆண்டுகளாக மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதால், கன்னியாகுமரி மக்களவை மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்லை புறக்கணிப்பதாக கிராம மக்கள் குற்றம் சாடடினர்.

தருமபுரி மக்களவை தொகுதிக்கு பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் ரயில்வே தரை பாலம் அமைக்கப்படாததை கண்டித்து, திட்டமிட்டபடி கிராம மக்கள் ஒட்டு மொத்தமாக தேர்தலை புறக்கணித்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், 4 மணி நேரத்திற்குப் பிறகு  அப்பகுதி மக்கள் வாக்களிக்க தொடங்கியதால், இரவு 10 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே கச்சிபெருமாநத்தம் கிராம பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பரவலூர் ஊராட்சியில் இருந்து தங்களது கிராமத்தை தனி ஊராட்சியாக பிரித்து தர வலியுறுத்தி கச்சிபெருமாநத்தம் கிராம பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.Night
Day