எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் தன் குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்ப்பால் இன்றி தவிக்கும் பல குழந்தைகளுக்கு தனது பாலை பகிர்ந்தளிக்கிறார் தாய் ஒருவர். தன்னலற்ற அன்புடன் தாய்ப்பால் தானம் அளிக்கும் பெண் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
இன்றைய நவீன உலகத்தில் பல பெண்கள் தங்களின் அழகு குறைந்துவிடுமோ என்ற எண்ணத்தில் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் பெற்று கொண்டால் குண்டாகி விடுவோம், அதனால் அழகு குறைந்துவிடும் என வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களும் இருக்கின்றனர். இவ்வாறான பல பெண்களுக்கு மத்தியில் தான் செல்வ பிருந்தா என்ற பெண் தாய்ப்பால் தானம் செய்து பல குழந்தைகளின் தாயாகவும், தெய்வமாகவும் விளங்கி வருகிறார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த காட்டூர் அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வபிருந்தா. பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 2016 ஆம் ஆண்டில் பிரவீன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பிரனீத் என்ற ஆண் குழந்தையும், பிரணிக்கா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளது.
பெண் குழந்தை பிறந்தவுடன், குழந்தையின் உணவு தேவையைக்காட்டிலும் கூடுதலாக தாய்ப்பால் சுரக்கத் தொடங்கியது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலின் தேவை குறைவு என்பதையும், குழந்தை வளர வளர தாய்ப்பாலின் தேவை அதிகம் என்பதையும் புரிந்து கொண்டார் செல்வப் பிருந்தா. அப்போது, அரசு மருத்துவமனைகளில், குறைபிரசவத்தில் பிறந்த பல குழந்தைகள் பலவீனமாகவும், நோய் வாய்ப்பட்டும், தாய்ப்பால் கிடைக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் சிகிச்சை பெற்று வருவது செல்வபிருந்தாவுக்கு தெரியவந்தது.
சிகிச்சையில் குழந்தைகளின் பசியைப் போக்கி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் வல்லமை தாய்ப்பாலுக்கு உண்டு. இதனால் தனது குழந்தையின் தேவைக்கு அதிகமாக சுரந்த தாய்ப்பாலினை, மருத்துவர்களின் வழிகாட்டலுடன், 'அமிர்தம் தாய்ப்பால் தானம்' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் துணையுடன் தானம் கொடுக்க தொடங்கினார் செல்வ பிருந்தா. அவ்வாறாக கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 300 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்ததால், தாய்ப்பாலுக்காக ஏங்கி தவித்த எண்ணற்ற குழந்தைகள் உயிர்பெற்றனர்.
செல்வபிருந்தாவின் இந்த நிகரற்ற செயலை அங்கீகரித்து பாராட்டி, 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்' நிறுவனமும், 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்' நிறுவனமும் அவருக்கு சான்று மற்றும் பதக்கம் வழங்கி கௌரவித்தது. சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு நாடுமுழுவதும் உள்ள தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார் செல்வபிருந்தா.
தாய்ப்பால் தானம் செய்யும் தனது மருமகள் குறித்து பெருமையாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள செல்வபிருந்தாவின் மாமியார், தான் வாழ்ந்த காலத்தில் தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும் அனைவரும் தாய்ப்பால் தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தாய்ப்பால் என்பது ஒரு குழந்தையின் வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான உணவு. சில காரணங்களால், சில தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பாலை வழங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த நேரத்தில் தாய்ப்பால் தானம் தரும் பெண்கள் உயிர்காக்கும் தெய்வங்களாக காட்சியளிக்கின்றனர்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வாரம் விழா கொண்டாடும் இத்தருணத்தில், செல்வ பிருந்தாவின் இத்தகைய செயலுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதுபோன்ற தாய்மார்களை ஊக்குவித்து தாய்ப்பால் தானத்தை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது சமூக நன்மை மட்டுமல்ல, மனிதநேயத்திற்கு உயிரூட்டும் செயலாகும்..