எழுத்தின் அளவு: அ+ அ- அ
விருதுநகரில் உள்ள அம்மா உணவகத்தில் தயிர் சாதம், சாம்பார் சாதத்தை 20 ரூபாய்க்கு விற்பனை செய்த ஊழியர்களிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஏழை எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் தரமான உணவு வழங்கும் அம்மா உணவகம் திட்டத்தை கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா தொடங்கி வைத்தார். ஆனால் தற்போது விளம்பர திமுக ஆட்சியில் அம்மா உணவகம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் உணவு தரமானதாக இல்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அந்த வகையில், விருதுநகரில் உள்ள அம்மா உணவகத்தில் கூடுதல் விலைக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு முன்பு இந்த அம்மா உணவகத்தில் தயிர்சாதம் 3 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த உணவுகள் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், விலைப்பட்டியல் கிழிக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் உணவகம் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமாக ஏன் விற்கிறீர்கள் என கேட்டு ஊழியருடனன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு அம்மா உணவகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உணவருந்தும் வகையில் சரியான விலைப் பட்டியலை வைத்து உணவினை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.