எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அண்ணாநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் மீது பின்னால் வந்த சொகுசு கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த நித்தின் சாய் என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அண்ணாநகர் பகுதியில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அதி வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நித்தின் சாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தை இயக்கிய நண்பர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்து என்றும் நிதின் சாய் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கும் நிதின் சாய் மற்றும் நண்பர்களுககும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளநிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சொகுசு காரில் 3 கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒரு வெள்ளை சட்டை அணிந்து வந்த நபர் இருந்ததாகவும், இருசக்கர வாகனத்தை மோதி விட்டு காரில் இருந்து இறங்கிய வெள்ளை சட்டை அணிந்த நபர் தன்னை மிரட்டியதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் தெரிவித்துள்ளார்.
எனவே, திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்து தொடர்பாக அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என உயிரிழந்த நித்தின் சாயின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.