குளறுபடிகளுடன் நடந்த நீட் தேர்வு... பரபரப்பு, பதற்றத்தில் மாணாக்கர்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் நடைபெற்ற நீட் தேர்வின் போது நடைபெற்ற குளறுபடிகள், கெடுபிடிகள் காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பும், பதற்றம் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோரை பதற வைத்த சம்பவங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு ...

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அதன்படி 2025-26ம் கல்வியாண்டு சேர்க்கைக்காக நாடு முழுவதும் 5 ஆயிரத்து 453 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் 22 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்வை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்பட்டது. 

மருத்துவராக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வு எழுத வந்த மாணாக்கர்கள், பரிசோதனை என்ற பெயரில் பல்வேறு கெடுபிடிகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஒரு சில இடங்களில் மின்துண்டிப்பால் மாணவ, மாணவிகள் அவதிக்கு ஆளாகினர்.

சென்னை ஆவடி சி.ஆர்.பி.எப் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வின் போது, மின்சாரம் இல்லாததால்  இருளில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும் அவலம் ஏற்பட்டது. இதைக் கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், பலத்த சூறைகாற்று காற்று மற்றும் கன மழையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் அவதிக்கு ஆளாகினர். இதனால் கூடுதல் நேரம் ஒதுக்க கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் கூலிபாளையம் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி தேர்வு மையத்தில், புகைப்படம் சரியாக இல்லை, வேறு புகைப்படம் எடுத்து இணைக்குமாறு கூறி மாணவி ஐஸ்வர்யா வெளியே அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பள்ளி நிர்வாகம் சார்பில் வேறு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.
 
திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஏவிபி கலை அறிவியல் கல்லூரி மையத்தில் நீட் தேர்வு எழுத வந்த ஊத்துக்குளியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவியின் சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் தேர்வு எழுத அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் அட்ரசை சரியாக படிக்காமல், திருப்பரங்குன்றத்திற்கு பதிலாக நரிமேடு பகுதி தேர்வு மையத்திற்கு மாறி வந்த மாணவி ஒருவர், நீட் தேர்வு எழுத முடியாமல் திரும்பிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மதுரை திருப்பரங்குன்றம் தனியார் கல்லூரி தேர்வு மையத்திற்கு வந்த மாணாக்கர்களும் பெற்றோர்களும் வெயிலில் காத்திருக்க வைக்கப்பட்டனர். இதனால் அதிகாரிகளுடன் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக வந்த மாணவி ஒருவர், தாலியை கணவனிடம் கழட்டி கொடுத்துவிட்டு வேகவேகமாக தேர்வு எழுத சென்றார். இதேபோன்று கொலுசு, மெட்டி, தோடு, மூக்குத்தி உள்ளிட்டவற்றை மாணவிகள் சிரமப்பட்டு கழட்டி கொடுத்து விட்டு சென்றனர்.

தஞ்சை கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப் பள்ளி நீட் தேர்வு மையத்தில், மாணாக்கர்களின் நுழைவுச் சீட்டில் இருந்த புகைப்படத்தில் கையெழுத்து மற்றும் தேதி இல்லை என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த ஸ்டுடியோவில் புதிய போட்டோ எடுத்து வந்ததை அடுத்து மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இப்படி பல்வேறு குளறுபடிகள் மற்றும் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஒருவழியாக நீட் தேர்வு நடந்து முடிந்தது. இனி வரும் காலங்களில் நீட் தேர்வுக்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கடைபிடித்து மாணாக்கர்கள் தேர்வுக்கு முந்தைய சிரமங்களை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

Night
Day