எழுத்தின் அளவு: அ+ அ- அ
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, தனது சொந்த நிலத்தை அளந்து முள்வேலி போட வந்த நபரை திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையிலான அடியாள் கும்பல் சரமாரியாகத் தாக்கி விரட்டியடித்துள்ளது. தாக்குதல் வீடியோ வைரலாகி வரும் நிலையில் திமுக நிர்வாகி செய்த அராஜகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
நீலகிரி மாவட்டம் அரக்கம்பை கிராமத்தில் கடக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை 2021-ம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். இந்தநிலையில் விற்ற இடத்தில் முள்வேலி அமைப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த திமுக நடுஹட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணனின் மகனும் திமுக நிர்வாகியுமான அருண் என்பவர் பத்துக்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்து லட்சுமணன், அவரது மகன் மல்லி மற்றும் ஆல்போட்ஸ் பகுதியை சேர்ந்த சுனில் ஆகியோரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
எதற்காக அடிக்கிறார்கள் என்ற காரணம் கூடத் தெரியாத நிலையில், தாக்குதலில் காயமடைந்த சுனிலும், மல்லியும் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து லட்சுமணன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் வழக்குப் பதிவு செய்த போலீசார் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. நிலத்தை அபகரிக்கும் நோக்கில் திமுக நிர்வாகி அருண் இந்த தாக்குதலை நடத்தியதாகவும், போலீசார் உரிய விசாரணை நடத்தி நியாயத்தை நிலை நாட்ட வேண்டும் என்கிறார் பாதிக்கப்பட்ட லட்சுமணன்.
2006-2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில், அக்கட்சியைச் சேர்ந்த பலரும் நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் நில அபகரிப்பு புகாரில் சிக்காத திமுக நிர்வாகிகளே இல்லை என்ற அளவுக்கு அராஜகம் உச்சம் தொட்டது. அதனால்தான் அடுத்து ஆட்சிக்கு வந்த மாண்புமிகு அம்மா, காவல்துறையில் நில அபகரிப்புக்கென தனிப் பிரிவையே ஏற்படுத்தி பல வழக்குகளை பதிவு செய்து திமுகவினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து, உரியவர்களிடம் ஒப்படைத்தார். இந்தநிலையில் தற்போதைய திமுக ஆட்சியிலும் நில அபகரிப்பு அராஜகம் தலைவிரித்தாடி வருவது தொடர்கதையாக மாறி வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது......