அசத்தலாக உருவான விழிஞ்சம் துறைமுகம்..! நாட்டின் முதல் தானியங்கி துறைமுகம்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

தெற்காசியாவின் முக்கிய கடல்சார் வணிகத்தின் மையமாக இந்தியாவை மாற்றக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க திட்டம் தான் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம். மற்ற துறைமுகங்களில் இல்லாத பல விஷயங்கள் விழிஞ்சம் துறைமுகத்தில் உள்ள நிலையில் அவை என்னென்ன விரிவாக பார்க்கலாம்...

இந்தியாவின் கடல்சார் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என புகழப்படும் அளவுக்கு பல்வேறு சிறப்புகள் கொண்டுள்ளது இந்த விழிஞ்சம் துறைமுகம்.

இதுவரை இந்தியாவின் 75 சதவீத சரக்கு கன்டெய்னர்கள் இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகம் கையாண்டு வந்த நிலையில் அந்நியச் செலாவணி மற்றும் வருவாயில் குறிப்பிடத்தக்க இழப்பை இந்தியா சந்தித்து வந்தது. இந்தநிலையில் தற்போது விழிஞ்சம் துறைமுகம் சர்வதேச கடல்சார் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் என்பதால் கடல்சார் வருவாயில் குறிப்பிடத்தக்க பெரும் பகுதியை இந்தியாவிற்கு கொண்டு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

துறைமுகத்துக்குள் வரும் கப்பல்கள் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். துறைமுகத்தில் இறக்கப்படும் கண்டெய்னர்களுக்கு கஸ்டம்ஸ் வரி செலுத்த வேண்டும். இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் வரும். மேலும் இத்துறைமுகம் மூலம் 5000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கண்டெய்னர் பிசினஸ், தொழில் துறை, உற்பத்தித் துறை, போக்குவரத்து, சுற்றுலா என பல துறைகளின் வளர்ச்சிக்கும் விழிஞ்சம் துறைமுகம் நிலையான ஆதாரமாகவும் இருக்கும் என்கின்றனர்.

அதுமட்டுமின்றி இந்திய வர்த்தகம் மற்றும் தளவாடங்களுக்கான வலுவான உலகளாவிய இருப்பைக் கொடுக்கும் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவும் விழிஞ்சம் துறைமுகம் பார்க்கப்படுகிறது. இந்த மூலம் தெற்காசியாவின் முக்கிய கடல்சார் வணிகத்தின் கேந்திரமாகவே இந்தியா மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி உலகளாவிய கடல்சார் வரைபடத்தில் கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகமும் இடம் பெற்றுள்ளது. 

கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகம், அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் 8 ஆயிரத்து 867 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடல் போக்குவரத்து பாதையில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவிலேயே விழிஞ்சம் துறைமுகம் அமைந்துள்ளதாலும் இயற்கையாகவே ஆழமானதாகவும் இருப்பதாகலும் மிகப்பெரிய சரக்குகளை கூட அசால்ட்டாக கையாள முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். 

கடல் பாதைக்கு இவ்வளவு அருகில் நம் நாட்டில் வேறு துறைமுகங்கள் இல்லை என்கிறார்கள். விழிஞ்ஞம் துறைமுகம் இயற்கையாகவே 28 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளதால் ஒரே சமயத்தில் 5 பெரிய மதர் ஷிப்புகளை கூட சர்வசாதாரணமாக துறைமுகத்துக்குள் பார்க் செய்ய முடியுமாம். உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில் ஒன்றான MSC துருக்கியை விழிஞ்சம் துறைமுகத்தில் நிறுத்திய போது சர்வதேச பொறியாளர்களே அசந்து போய் வாய் பிளந்ததாகவும் கூறுகின்றனர். 

3 மீட்டர் நீளம் கொண்ட இந்த துறைமுகம் ஆண்டுக்கு 30 லட்சம் கண்டெய்னர்களைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம். அதேநேரம் 270க்கும் மேற்பட்ட சர்வதேச வணிக கப்பல்களை ஒரே நேரத்தில் துறைமுகத்தில் நங்கூரமிட்டு பார்க்கிங் செய்ய முடியுமாம்.

அதுமட்டுமின்றி விழிஞ்சம் நாட்டின் முதல் பிரத்யேக சரக்கு பரிமாற்ற துறைமுகம் என்பதோடு நாட்டின் முதல் தானியங்கி துறைமுகமும் இதுதான். இங்குள்ள கிரேன்கள் முழுவதும் தானியங்கி வகையை சேர்ந்தது. இதனால் சரக்குகளை விரைவில் கையாள முடியும். ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட, செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பையும் கொண்டுள்ளது.

விழிஞ்சம் துறைமுகம் கிங்டாவோ, ஷாங்காய், பூசன் மற்றும் சிங்கப்பூர் போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுடன் இணைவதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல நாடுகளுடன் இணைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட விழிஞ்சம் துறைமுகம் கடல்சார் வணிகத்தில் நாட்டையே அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்கின்றனர் அறிஞர்கள்.. 

Night
Day