உலக செஸ் சாம்பியன் தமிழக வீரர் குகேஷ்

எழுத்தின் அளவு: அ+ அ-

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் குகேஷ் வென்று சாதனை படைத்துள்ளார். 

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சீனாவின் டிங் லிரென் இருவரும் மோதினர். 13 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்த நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் 14வது சுற்று நேற்று நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் குகேஷ், கறுப்பு நிற காய்களுடனும், டிங் லிரென் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த போட்டியின் 58வது நகர்த்தலில் சீன வீரரை வீழ்த்தி, குகேஷ் வெற்றி பெற்று, 7.5 புள்ளிகளுடன் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

18 வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ், வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டார். வெற்றி பெற்ற குகேஷுக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ‘2வது இந்திய வீரர் மற்றும் மிக குறைந்த வயதில் இந்த பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ், தன்னுடைய 2 வருட தீவிர பயிற்சிக்கு கிடைத்த வெற்றி இது என மகிழ்ச்சி தெரிவித்தார். போட்டிக்கு உடல் மற்றும் உளவியில் ரீதியாக தயாரானதாக கூறிய அவர், ஒரு இளம் செஸ் வீரரின் கனவு எதுவாக இருக்குமோ அது நிறைவேறியுள்ளது என்று கூறினார். தம்மை நேசித்த நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிப்பதாகவும் குகேஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Night
Day