மிரட்டும் பறவை காய்ச்சல்... சிக்கன் சாப்பிடலாமா - வேண்டாமா

எழுத்தின் அளவு: அ+ அ-

கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வரும் சூழலில், கேரளாவில் பரவி வரும் H5N1 என்ற பறவைக் காய்ச்சல் நோய், பறவைகளை மட்டுமல்ல மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இவற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்த வழிமுறைகளை இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக காணலாம்...
நாகரிகமும், தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டே செல்லும் சூழலில் இவை அனைத்திற்கும் சவால் விடும் வகையில், புது புது நோய்களும் உருவாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு முதல் H5N1 என்ற பறவைக் காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இவை பறவைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 

கடந்த டிசம்பர் 2023ம் ஆண்டு நிலவரப்படி, 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் பறவைகளை இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இதன்காரணமாக கோழிப் பண்ணைகளில் இருந்த லட்சக்கணக்கான கோழிகள், வான்கோழிகளும் உயிரிழந்தன.

இந்த வகை பறவை காய்யச்சல் பறவைகளை மட்டுமே தாக்கும் என அனைவரும் நினைத்திருந்த வேளையில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் 41 வயது நபருக்கு H10N3 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது உலக மக்களை அதிர்ச்சியடைய செய்தது.

அந்த வகையில், தற்போது பறவைகளை தாக்கி வரும் எச்5என்1 வகை பறவைக்காய்ச்சல் மிகக் கொடியது என்றும், எளிதில் மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் இது கொரோனா போன்ற பெருந்தொற்று நோயாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்புளுயன்ஸா வைரஸ் ஏ.பி.சி.டி என நான்கு வகைப்படும் என்றும், ஏ.பி.சி ஆகிய வகைகள் மனிதர்களை தாக்கும் வகை என்றும், இன்புளுயன்ஸா ஏ வைரஸ் பறவைகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்புளுயன்ஸா வைரஸ் மூலம் மனிதர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொற்று ஏற்படலாம் என்றும், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவைகளை நாம் பராமரிக்கும் போதும் அல்லது வைரசால் பாதிக்கப்பட்ட பறவைகளை சாப்பிடுவதாலும் நோய் பரவும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்தும் நோய் பரவ வாய்ப்புள்ளதாகவும், காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி ஆகியவை இருக்கும் என்றும், வயதானவர்கள், பச்சிளம் குழந்தைகள் போன்றவர்களுக்கு பறவைக் காய்ச்சல் வந்தால் மிகவும் சிரமம் என எச்சரிக்கும் மருத்துவர்கள்,  பறவைக் காய்ச்சல் நோயை சுவாசப் பரிசோதனை செய்து கண்டுபிடிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

பறவைக் காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிக்கன் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பது சிறந்தது என்றும், ஒருவேளை அவற்றை உட்கொள்ள நேர்ந்தால், நன்றாக கழுவி நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். 

நோய்கள் மனித இனத்தை சுற்றிவரும் வேளையில், மருத்துவர்களின் அறிவுரையோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் நம் ஆரோக்கியத்தை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும் என்பதே நலம் விரும்பிகளின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day