எழுத்தின் அளவு: அ+ அ- அ
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரின் மகன், மகள் வீடுகளில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, வருமானத்திற்கு அதிகமாக இரண்டு கோடியே ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐ.பெரியசாமி, அவரின் மனைவி சுசீலா, அவரின் மகனும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் மற்றும் மற்றொரு மகன் பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. இதனடிப்படையில் சட்டவிரோத பணிப்பரிமாற்றம் நடைப்பெற்றதா என்ற கோணத்தில் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான சென்னை மற்றும் திண்டுக்கலில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமாரின் திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள இல்லத்தில் ஆறு அதிகாரிகள் அடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் திண்டுக்கல் வள்ளலார் நகரில் வசித்து வரும் அமைச்சர் பெரியசாமியின் மகள் இந்திராணியின் வீட்டில் ஆறு அதிகாரிகள் அடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடியை தொடர்ந்து, அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவருடைய குடும்பத்தினரும் அமலாக்கத்துறை பிடியில் சிக்கி உள்ளனர்.