எழுத்தின் அளவு: அ+ அ- அ
வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்பர திமுக அரசு ஆட்சி நடத்தி வருவதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார். உங்களுடன் ஸ்டாலின் என முதலமைச்சர் சொல்வது வேடிக்கையாக உள்ளதாகவும், இவ்வளவுநாள் ஸ்டாலின் நம்முடன் இல்லையா என்றும் புரட்சித்தாய் சின்னம்மா விமர்சித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியப்பின், சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு கழகம் ஒன்றிணையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கழகம் ஒன்றாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்று கழகத்தினர் அனைவரும் கூறுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா கூறினார்.
விளம்பர திமுக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வீண் செலவு என்று குற்றம் சாட்டிய புரட்சித்தாய் சின்னம்மா, திமுகவினர் தங்களுடைய சொந்த பிரச்னைக்காக டெல்லி சென்று வருவதாகவும் சாடினார். செய்ய முடியாததை சொல்வதுதான் திமுக-வின் வேலை என்றும், இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவதுதான் தமது வேலை என்றும் கூறிய புரட்சித்தாய் சின்னம்மா, மக்கள் விழிப்புடன் இருப்பதால் விளம்பர திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் கழகத்தினருக்கு புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகள் வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.