60 நாள் மீன்பிடித் தடைக்காலம் நிறைவு - கடலோடிய மீனவர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

61 நாள் மீன்பிடித் தடைக்‍காலம் முடிவடைந்ததையடுத்து, தமிழகத்தில் சென்னை, தூத்துக்‍குடி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்‍கு மீன்பிடிக்‍க சென்றனர்.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை, 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைகாலம் கடைபிடிப்பது வழக்கம். அந்த நாட்களில் விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது படகுகளை பழுது பார்ப்பது, வண்ணம் பூசுவது போன்ற வேலைகளில் ஈடுபடுவர். தற்போது மீன்பிடித் தடைக்‍காலம் முடிவடைந்ததையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்‍கு மீன்பிடிக்‍க சென்றனர்.

தூத்துக்‍குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றன. 61 நாட்களுக்கு பின்பு கடலுக்கு செல்வதால், விசைப்படகுகளை ஒன்றோடு ஒன்று மோதியபடி மீனவர்கள் ஆர்வமாக கடலுக்குச் சென்றனர். நீண்ட நாட்கள் கழித்து கடலுக்‍குச் செல்வதால், அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என, விசைப்படகு உரிமையாளர்களும், மீன்பிடி தொழிலாளர்களும் நம்பிக்‍கை தெரிவித்துள்ளனர்.

மீன்பிடி தடைக்‍காலம் முடிவடைந்ததையடுத்து, நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு மாலை அணிவித்து சூடம் ஏற்றி பூஜை செய்து மீனவர்கள் கடலுக்‍கு புறப்பட்டனர். அக்கரைப் பேட்டை, நாகூர், வேதாரண்யம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நாகை துறைமுகத்தில் இருந்து கடுவையாற்றின் வழியாக விசைப்படகுகளில் மீனவர்கள் அணிவகுத்து சென்றதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்தை தொடர்ந்து, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான விசைப்படகுகள் கடலுக்‍கு புறப்பட்டன. விசைப்படகு உரிமையாளர்களும், மீன்பிடி தொழிலாளர்களும் உற்சாகமுடன் ​மீன்பிடிக்‍க கடலுக்‍கு சென்றனர். இந்த தடைகாலத்தில் மீன்களின் இனப்பெருக்‍கம் அதிகரித்திருக்‍கும் என்பதால், அதிக அளவு மீன்கள் கிடைக்‍கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், அரசு அறிவித்தபடி, கூடுதல் டீசலை உடனடியாக வழங்கவேண்டும் என விசைப்படகு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Night
Day