12-வது ஆண்டில் தடம் பதித்த அம்மா உணவகம்...கேக் வெட்டி கொண்டாடிய பணியாளர்கள்...!

எழுத்தின் அளவு: அ+ அ-

ஏழை எளியவர்கள், சாமானியர்களின் பசியை போக்கிய உன்னத திட்டமான அம்மா உணவக திட்டம் 12 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதையொட்டி, ஈரோட்டில் பணியாளர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். நாட்டிற்கே முன்னோடி திட்டமாக விளங்கும் அம்மா உணவக திட்டம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

உணவின்றி தவிக்கும் ஏழை எளியவர்களுக்கு பசியை போக்கும் வகையிலும், குறைந்த விலையில் தரமான உணவு என்ற நோக்கிலும் அம்மா உணவகம் என்ற உன்னத திட்டத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு அம்மா தொடங்கி வைத்தார். முதலில் சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், பின்னர் மற்ற மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் ஏழைப் பெண்கள், விதவைப் பெண்கள் போன்றவர்கள் பணியில் அமர்த்தப்பட்டதன் மூலம் அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது.

ஒரு ரூபாய்க்கு இட்லி, மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம், ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம் என  வழங்கப்பட்டு, சாமானியர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ததுடன், பசியுடன் யாரும் உறங்கச்செல்வதில்லை என்ற நிலையை உருவாக்கியது அம்மா உணவக திட்டம்.

நாட்டிலேயே முதன்முதலில் தமிழகத்தில்தான் மாண்புமிகு அம்மா அவர்களால் இந்த திட்டம்  துவங்கப்பட்டது. தேர்தல் அறிக்கையில் கூட இடம்பெறாத இந்த திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம்  சொல்லாத திட்டத்தையும் நிறைவேற்றியவர் என்ற பெருமையை பெற்றார் மாண்புமிகு அம்மா.  நாட்டிற்கே முன்னோடியான இந்த திட்டம், பின்னாளில் ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா  மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டது.

அதேபோல், ஈரோட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் அம்மா உணவகம் தொடங்கப்பட்ட நாள் முதல் பொதுமக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பினை பெற்றது. மாவட்டம் முழுவதும் அம்மா உணவகம் திட்டம் விரிவடைந்து அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்தது. இந்த திட்டம் 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஞாயிறு அன்று  12ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை ஈரோடு மாநகர் காந்திஜி சாலையில் உள்ள அம்மா உணவகத்தில், ஈரோடு மாநகராட்சி அம்மா உணவக பணியாளர்கள் நல சங்கத்தினர், அம்மா உணவக பணியாளர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டினர்.

இதனைத் தொடர்ந்து, பணியாளர்கள் ஒருவருக்கொருவர் கேக்கினை ஊட்டிக்கொண்டதோடு, பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கியும், உணவு பரிமாறியும் உபசரிப்பில் ஈடுபட்டனர்.

2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஏழை எளியவர்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக அம்மா உணவக பணியாளர்கள் பெருமிதம் தெரிவித்தனர்,

ஒரு ரூபாய்க்கு இட்லி, மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம், 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம் என  வழங்கப்படும் நிலையில், நாள் ஒன்று 600 நபர்கள் வரை உணவருந்த வருவதாகவும், இட்லி மட்டுமே நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 200 தயார் செய்வதாகவும் அம்மா உணவக பணியாளர்கள் தெரிவித்தனர்.

அம்மா உணவகத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுவரும் ஏழை எளிய பெண்களின் நலன் கருதி,  அவர்களுக்கு ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட பலன்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day