ரூ.1,000 மகளிர் தொகை எங்கே!, அமைச்சர் ஐ.பி.யை தெறிக்கவிட்ட கிராம பெண்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே மகளிர் உரிமைத் தொகை வரவில்லை எனக்கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஐ.பெரியசாமியை, பெண்கள் சிலர் சூழ்ந்து நின்று முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 4 மாதமாக மகளிர் உரிமை தொகை வரவில்லை என கூறி அமைச்சர் ஐ.பெரியசாமியை சூழ்ந்த பெண்கள், அவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பிய காட்சிகள் தான் இவை.

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆத்தூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த திமுகவினர் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திச் சென்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பஞ்சம்பட்டி, கலிக்கம்பட்டி, செட்டியபட்டி, பிள்ளையார் நத்தம், ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடச் சென்றார். முன்னதாக, பஞ்சம்பட்டி அருகே அமைச்சர் ஐ.பெரியசாமி பிரச்சாரம் மேற்கொண்டபோது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் அவரை சூழ்ந்தனர். இதனால் பதற்றமடைந்த அமைச்சர் ஐ.பெரியசாமி எதுவும் புரியாமல் விழிபிதுங்கி நின்றார். பின்னர் பெண்கள் சிலர் தங்களுக்கு கடந்த 4 மாதமாக மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் வரவில்லை என அவரிடம் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினர். மேலும் அவரை சூழ்ந்துகொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பியதால் சிறுது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்களின் கேள்விகளால் பதறிப்போன அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 3 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ளதாக ஏதேதோ, மழுப்பலான பதில் அளித்து சமாதானம் செய்ய முயன்றார்.  ஆனால் அதற்கு செவிசாய்க்காத பெண்கள் அமைச்சரை, நோக்கி கேள்விக்கணைகளை தொடர்ந்து வீசினர்.

இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் திறுதிறுவென முழித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, விரைவில் உரிமைத் தொகை வழங்க ஏற்பாடு செய்து தருகிறேன் என மழுப்பலான பதிலை கூறிவிட்டு அங்கிருந்து விட்டால் போதும்டா என்ற ரீதியில் ஓட்டம் பிடித்தார். 

Night
Day