யானைகள் புத்துணர்வு முகாமை உடனே நடத்துக - திமுக அரசுக்கு, புரட்சித்தாய் சின்னம்மா வேண்டுகோள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக மக்களின் பாதுகாப்பிற்காகவும், திருக்கோயில்களில் உள்ள யானைகளின் நலனைக் கருத்தில் கொண்டும் யானைகள் புத்துணர்வு முகாமை உடனே நடத்த வேண்டும் என, திமுக தலைமையிலான விளம்பர அரசை வலியுறுத்தியுள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருகோயிலில் உள்ள யானை தெய்வானை தாக்கியதில் யானை பாகன் மற்றும் அவரது உறவினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மனிதர்களை பாதுகாக்கவே முடியாத இந்த திமுக விளம்பர ஆட்சியால் விலங்குகளை பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை - திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டதே இல்லை - இது இந்த ஆட்சியாளர்களின் மனிதாபிமானமற்ற செயலாகத்தான் பார்க்கமுடிகிறது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுத்துவிட்டால் மட்டும் போதுமா? அவர்களையே நம்பி இருக்கும் குடும்பத்தினரை அவர்களது வாழ்நாள் முழுவதும் யார் காப்பாற்றுவது? என்பதை இந்த ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும் என தெரிவித்துள்ள புரட்சித்தாய் சின்னம்மா, திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 2001ஆம் ஆண்டு குருவாயூர் கோவிலுக்கு யானை ஒன்றை வழங்கினோம் - இதற்காக குருவாயூர் கோவிலுக்கு சென்ற போது அங்கு யானைகள் பராமரிக்கப்படும் முறைகளையும், அதன் காரணமாக யானைகள் சிறப்பாக புத்துணர்வு பெறுவதையும் கேட்டறிந்தோம் - அப்போதுதான் தமிழகத்தில் திருக்கோயில்களில் உள்ள யானைகளின் நலனைக் கருத்தில் கொண்டு இங்குள்ள யானைகளுக்கும் புத்துணர்வு முகாம் நடத்தலாம் என்ற கருத்துரு உருவானது - இதன் அடிப்படையில்தான் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சிக் காலத்தில் யானைகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். "விலங்குகளை காக்க வேண்டியது நம் கடமை, குறிப்பாக மனிதர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் மிகப்பெரிய நில வாழ் விலங்கான யானையை காப்பது நம் முக்கிய கடமையாகும்" என சொல்லித்தான் 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமை, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், முதுமலை வனவிலங்கு சரணாலயம் தெப்பக்காட்டில் புரட்சித்தலைவி அம்மா முதன் முதலாக தொடங்கி வைத்தார் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். இதில் தமிழகத்தின் திருக்கோயில்கள், மடங்கள், தனி நபர்கள் மற்றும் வனத்துறை பராமரிப்பில் உள்ள அனைத்து யானைகளும் உடல் நலமும், மன நலமும் பேணப்படும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மாத காலத்திற்கு நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் நல வாழ்வு முகாம் நடத்தப்பட்டது - மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட யானைகள் புத்துணர்வு முகாமில், புதுச்சேரி மாநில இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான லட்சுமி என்ற யானையையும் முகாமில் பங்கேற்க அனுமதிக்கும்படி புதுச்சேரி மாநில அரசு கேட்டுக் கொண்டது - அதேபோன்று நாகூர் தர்காவுக்குச் சொந்தமான பாத்திமா பீவி என்ற யானையையும் இந்த முகாமில் பங்கேற்க அனுமதிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது - இந்த கோரிக்கைகளை ஏற்று, இரண்டு யானைகளையும் முகாமில் அனுமதிக்க புரட்சித்தலைவி அம்மா உத்தரவிட்டார் - திருக்கோயில்களில் உள்ள யானைகளை, தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தாமல் போதுமான ஓய்வு தரவும், சத்தான உணவளித்து யானைகளை முறையாக பராமரிக்க வேண்டுமென புரட்சித்தலைவி அம்மா அறிவுறுத்தினார் என புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க, யானைகளுக்கு புத்துணர்வு முகாமில் முழுமையான ஊட்டச்சத்து கொண்ட உணவினை அளித்து, அவற்றிற்கு அமைதியும், ஓய்வும் அளிக்கும் வகையில் பராமரிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன - முகாம்களில் போதுமான ஓய்வு, பழங்கள், காய்கறிகள், கரும்பு, சிறுதானியங்கள், வெல்லம் போன்ற இயற்கையான சத்துப் பொருட்கள் வழங்கப்படுவதோடு, ஆயுர்வேத மருந்துகளும் உணவுடன் கலந்து கொடுக்கப்பட்டது - உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளும் அளித்து, கால்நடை மருத்துவர்களின் முறையான பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டன - இதனால் இந்த முகாம்கள் முடிந்த பின்னர் யானைகள் புத்துணர்வுடன் காணப்பட்டன - இத்திட்டம் அனைத்து தரப்பினராலும் சிறப்பாக பாராட்டப்பட்டது என புரட்சித்தாய் சின்னம்மா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 

ஆனால் 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது யானைகள் முகாம் நிறுத்தப்பட்டது - பின்னர் 2011 ஆம் ஆண்டு அம்மா ஆட்சியில்தான் மீண்டும் யானைகள் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டது - தற்போது 2021ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் யானைகள் முகாம் நடத்தப்படவில்லை - 100 கோடியில் எழுதாத பேனாவிற்கு நடுக்கடலில் பேனா சிலை வைக்கும் திமுக அரசு, கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை - கார் பந்தயம் நடத்த மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்கும் இந்த ஆட்சியாளர்களால், உயிருள்ள யானைகளை காப்பாற்றக்கூடிய புத்துணர்வு முகாமை நடத்த ஏன் முடியவில்லை? என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோன்று தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புரட்சித்தலைவி அம்மாவினால் ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், மாணவச்செல்வங்களுக்கு விலையில்லா மடிக்கணினி, கிராமப்புற ஏழைப்பெண்களுக்கு ஆடு, மாடு வழங்கியது, திருக்கோயில்களுக்கு அன்னதானம் வழங்கியது போன்ற எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை மூடுவிழா செய்ததுதான் இந்த ஆட்சியாளர்களின் நான்கு ஆண்டுகால சாதனையாக உள்ளது என, புரட்சித்தாய் சின்னம்மா கடுமையாக சாடியுள்ளார்.

எனவே, திமுக தலைமையிலான அரசு எஞ்சிருக்கும் காலத்திலாவது சுயநலப்போக்கினை கைவிட்டு தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இது போன்ற உயிரிழப்புகள் இனி ஏற்படாமல் தடுத்திடவும், தமிழக மக்களின்  பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையிலும், யானைகளின் நலனைக் கருத்தில் கொண்டும், யானைகள் புத்துணர்வு முகாமை உடனே நடத்த வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசை புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

Night
Day