நீலகிரி மாவட்டம் பந்தலூர் இறந்தவரின் உடலை எடுத்து செல்ல சாலை வசதி இல்லை என கூறிய நபரை மருத்துவமனைக்குள் நுழைந்து திமுக நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அத்திக்குன்னா பகுதியில் இறந்தவரை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் உடலை எடுத்து சென்ற போது சாலை மற்றும் தெருவிளக்கு வசதி இல்லை என வேதனையில் கூறிச்சென்றுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவைச் சேர்ந்த நெல்லியாளம் நகராட்சி இளைஞர் அணி துணை அமைப்பாளரும், உதவி ஒப்பந்ததாரருமான கார்த்திக் என்பவர் அடியாட்களுடன் சென்று இறந்தவரின் உறவினரான இளையராஜா மற்றும் நெடுஞ்செழியன் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்தவர்கள் கூடலூர் மற்றும் பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திமுக நிர்வாகி கார்த்திக் மீண்டும் அடியாட்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெடுஞ்செழியனை காவல் நிலையத்தில் புகார் அளித்தால் 10 நாட்களுக்குள் கொன்று விடுவதாக அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியான நிலையில், போலீசார் நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.