எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை அவனியாபுரம் பகுதியில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கழக தொண்டர்கள் அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.
அவனியாபுரம் பகுதியில் கடந்த 1990ம் ஆண்டு என்.எஸ்.கே மன்றம் மூலம் அப்போதைய 15வது வார்டு உறுப்பினர் இருளப்பன் சார்பில் இரண்டரை அடி உயரத்தில் அதிமுக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திருவுருவச் சிலை நிறுவப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வாடிவாசல் அமைவிடம் அருகே உள்ள புரட்சித் தலைவரின் சிலை மண்டபம் போல அமைக்கப்பட்டு இரும்பு கேட்டுகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை திடீரென புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் சிலை சேதமடைந்த நிலையில் கீழே சரிந்து கிடந்துள்ளது. இதை பார்த்து மனவேதனையும் அதிர்ச்சியும் அடைந்த கழக தொண்டர்கள் சிலையை சரி செய்து மீண்டும் தற்காலிகமாக நிறுவி வைத்தனர்.
சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து அளிக்கப்பட்ட தகவலை அடுத்து அங்கு வந்த அவனியாபுரம் காவல் சரக உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, புரட்சித்தலைவர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அஇஅதிமுக தொண்டர்கள் சிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.