எழுத்தின் அளவு: அ+ அ- அ
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை மீண்டும் நாளை கூடுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி சட்டப்பேரவையில் 2025- 2026ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, மார்ச் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. மார்ச் 24 முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று, பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவைக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் 6 மாத கால இடைவெளியில் சட்டப்பேரவை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தமிழக சட்டசபை மீண்டும் நாளை கூடுகிறது. நாளை தொடங்கி 4 நாட்கள் சட்டபேரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூடியதும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் இந்த கூட்டத்தில் காரசார விவாதத்திற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.