நடவடிக்கை எடுக்க தவறிய மாவட்ட நிர்வாகம்... கனிம வள கடத்தலை தடுத்த மக்கள்... 09-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே, மலையை குடைந்து கனிம வளம் கடத்தும் முயற்சியை, ஊர் மக்கள் ஒன்று கூடி தடுத்துள்ளனர். கனிம வள கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

கனிம வள கடத்தலை தடுக்க, சாலையை கற்கள் வைத்து அடைத்து, அவசர கூட்டம் கூட்டி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த காட்சிகள்தான் இவை....

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே முருங்க விளை பகுதியில் இயற்கை எழில் கொஞ்ச, அரியவகை மூலிகை செடிகளை தன்வசம் வைத்துள்ளது பஞ்சனங்குழி மலை. 

இந்த நிலையில், மலை அடிவார பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மலையை குடைந்து கனிம வளம் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கனிம வள கொள்ளை காரணமாக அங்குள்ள ரப்பர் மரங்கள் முறிக்கப்பட்டு வருவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து மலையை குடைந்து கனிம வளங்கள், கனரக வாகனங்கள் மூலம் கடத்தி செல்வதால், அப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளதாக முருங்க விளை பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதற்காக கனரக வாகனங்களுக்கு ஊர் சாலைகளில் செல்ல அனுமதி இல்லை என எச்சரிக்கை பலகை வைத்தும், அதனை வாகன ஓட்டிகள் பொருட்படுத்தாததால், சாலைகளில் ராட்சத கற்களை வைத்து தடுப்புகள் அமைத்து ஊர் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கனிம வளங்கள் கடத்தலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகள், விவசாய நிலங்கள், குடிநீர் ஆகியவை பாதிக்கபடுவதாக கூறி, முருங்க விளை பகுதி மக்கள், அவசர கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

கனிம வளங்கள் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக முருங்க விளை பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும், பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Night
Day