கிருஷ்ணகிரியில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கொடுத்து ஏமாற்றிய ஆட்சியர் 09-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நடைபெற்ற தலைக்கவச விழிப்புணர்வு பேரணியில், வாகனஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவிப்பது போன்று போஸ் கொடுத்து விட்டு மறுபுறம் தலைக்கவசத்தை திரும்ப பெற்ற சம்பவம் கிருஷ்ணகிரியில் அரங்கேறியுள்ளது. 

கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு காவல்துறையினர், பொதுமக்கள், போக்குவரத்து துறை காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சரயு கொடி அசைத்து துவக்கி வைத்தார். புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணி ராயக்கோட்டை மேம்பாலம் வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டுனர்களுக்கு தலைக்கவசம் அணிவித்து ஆட்சியர் மற்றும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

அப்போது, வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவிப்பது போன்று ஆட்சியர் போஸ் கொடுத்தார். மறுபுறம் அந்த தலைக்கவசத்தை அரசு ஊழியர்கள் திரும்ப பெற்று மீண்டும் அட்டை பெட்டியில் போட்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க, அதனை அவர் மீண்டும் வாங்கி வாகன ஓட்டிகளுக்கு அணிவித்தார்.

விளம்பர திமுக அரசு எவ்வழியோ அவ்வழியே அதிகாரிகளின் வழி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த விளம்பர விழிப்புணர்வு நிகழ்ச்சி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.

varient
Night
Day