சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் திரண்ட தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். மேலும் செய்தியாளர்களையும் தடுத்து நிறுத்தி செய்தி சேகரிக்கவிடாமல் போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தூய்மை பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை மாநகாராட்சி அலுவலகம் முன்பு தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த மாதம் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. பொது இடத்தில் போராட்டம் நடத்தக்கூடாது எனக் கூறி தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இதேபோன்று மதுரையிலும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, OURLAND ஒப்பந்த நிறுவன பணியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் கடந்த மாதத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா முன்பு ஒன்று திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய முயன்றபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதில் பலருக்கு ரத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் தூய்மைப்பணியாளர்களை குண்டுகட்டாக கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் அங்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்களை செய்தி சேகரிக்கவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.