எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரதமர் மோடியின் வருகையையொட்டி தூத்துக்குடியில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் பங்கேற்று, தூத்துக்குடி புதிய விமான முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இதன்காரணமாக தூத்துக்குடியில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, ரயில்வே துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள 1,030 ரூபாய் கோடி மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலைத்துறையால் முடிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 571 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மற்றும் 548 கோடி ரூபாய் மதிப்பில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என பலர் கலந்துகொள்கின்றனர்.
இதையடுத்து, இரவு 9.40 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் பிரதமர் இரவு திருச்சியில் தங்குகிறார். பின்னர் 27ம் தேதி பகல் 12 மணிக்கு, ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு, ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று, பின்னர் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். தொடர்ந்து, பகல் 2.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, 28ஆம் தேதி பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூரில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சியில் வாகன அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து நட்சத்திர விடுதி வரை பிரதமர் செல்லும் சாலையில் மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பிரதமர் வாகனம் அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் அணிவகுத்து செல்வது போன்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாளை ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நாளை அரியலூர் செல்ல உள்ள நிலையில் பொன்னேரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மத்திய பாதுகாப்பு குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டு ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை ஆய்வு செய்தனர். ஹெலிகாப்டர் தளத்தை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.