தலைமறைவானாரா அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்...

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் பொதுமக்களும் விவசாயிகளும் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், விளம்பர திமுக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கண்ணிலேயே தட்டுப்படாமல் தலைமறைவாகியுள்ள சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 16ம் தேதி துவங்கி வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு இடங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சாலைகள், குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். விவசாய நிலங்களிலும் மழைநீர் தேங்கி அறுவடைக்கு தயாராக இருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, அதற்குரிய இழப்பீட்டை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். 

செயல்படாத விளம்பர திமுக அரசால் மக்களும், விவசாயிகளும் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ள நிலையில், இதை எல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், இன்னும் NOT REACHALE நிலையிலேயே உள்ளார். பருவமழை துவங்கி 8 நாட்களுக்கு மேலாகியும் அவர் தலைமைறைவாகவே இருந்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க, மக்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திரையரங்கில் டியூட் திரைப்படத்தை கண்டு ரசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

என்ன நடக்கிறது என்று விசாரித்தபோது, எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு மீண்டும் சீட் வழங்க கட்சி மேலிடம் மறுத்து விட்டதாகவும், இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் அவர் ஒதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், துணை முதலமைச்சர் உதயநிதியை முன்னிலைப்படுத்தும் வகையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை தனித்துவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் உள்கட்சி அரசியலுக்கு பலிகடா ஆகி இருப்பது என்னவோ அப்பாவி விவசாயிகளும் பொதுமக்களும்தான் என பல்வேறு தரப்பினர் கடுமையாக சாடியுள்ளனர்.

இதனிடையே, பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறி வந்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், மழை தீவிரமடைந்த பின்னர் தலைமறைவாகி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருப்பதாக மூத்த பத்திரிகையாளரான துரை கருணா கேள்வி எழுப்பியுள்ளார். துறை ரீதியான செயல்பாடுகள் மற்றும் களப்பணியில் அமைச்சர் ஈடுபடாமல் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

குற்றாலத்திற்கு சென்று பார்வையிடும் அமைச்சர், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மக்களை பற்றி கவலைப்படாமல் இருப்பது மோசமான முன்னுதாரணம் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் விரோத, விவசாயிகள் விரோத இந்த அரசு விரைவில் காணாமல் போகும் என்றும் அவர் எச்சரித்தார்.

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டிய வருவாய் துறை அமைச்சர் எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில், அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் வி.எஸ். ராமன் வலியுறுத்தியுள்ளார். ஆறுதல் சொல்லக் கூட செல்லாத அமைச்சரை வைத்துக் கொண்டு இந்த அரசு மழை வெள்ள பாதிப்புகளை எப்படி கணக்கிடப் போகிறது, நிவாரண உதவிகளை எப்படி வழங்கப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Night
Day