தருமபுரி : ரூ.200 கொடுத்து வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு கூட்டம் சேர்த்த திமுகவினர்

எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளரை அறிமுகம் செய்து வைப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஆளுக்கு 200 ரூபாய் எனப் பேசி அழைத்து வந்த நிலையில், பணம் தராததால் பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

200 ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி, தங்களுக்கு ஒரு ரூபாய் கூட தராமல் வெறுங்கையோடு திமுகவினர் திருப்பி அனுப்பிவிட்டதாக புலம்பும் பெண்களின் காட்சிகள் தான் இவை.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக  கூட்டம், மதிக்கோன் பாளையத்தில் உள்ள தனியார் மண்படத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட நிலையில் இந்நிகழ்ச்சிக்கு அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி, அம்பேத்கர் காலனி, நியூ காலனி, கோல்டன் தெரு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை திமுகவினர் டிராவல்ஸ் வாகனம் மூலம் அழைத்து வந்தனர். மேலும் அவர்களுக்கு தலா 200 ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி, வலுக்கட்டயாமாக, அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

நிகழ்ச்சி ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினர் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தியுள்ளனர். மேலும் திமுக நிர்வாகிகளின் மூலம் பொதுமக்களை அழைத்து வர பயன்படுத்தப்பட்ட டிராவல்ஸ் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு  செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

மேலும் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களுக்கு திமுகவினர் 200 ரூபாயை தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூட்டத்தில் பாதியிலேயே மண்டபத்தில் இருந்து வெளியே வந்து வெயிலில் கால்கடுக்க காத்திருந்தனர். ஆனால் அங்கேயும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 200 ரூபாய் தருவதாக வாக்குறுதி கொடுத்து அழைத்து வந்து, தற்போது வெறுங்கையோடு திமுகவினர் அனுப்பியதாக பெண்கள் சிலர் புலம்பினர்.

varient
Night
Day