தமிழக அரசுக்கு 10 நாட்கள் கெடு

எழுத்தின் அளவு: அ+ அ-

அரசியல் கட்சித் தலைவர்களின் ரோட் ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. 

மேலும், ரோட் ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரும் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
  
அதன் அடிப்படையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் வரை, தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை என்று உத்தரவிட்டனர். 

மேலும், ரோட் ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான 
வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என  தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Night
Day