எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக, சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனத்தை இயக்கினர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், திடீரென கொத்தம்பாடி, ராமநாயக்கன்பாளையம், தாண்டவராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக ராமநாயக்கன்பாளையம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே, வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென காற்றுடன் பெய்த கனமழையால் கிரிவலப் பாதையில் உள்ள பனைமரம் சரிந்து மின் கம்பத்தின் மீது விழுந்ததால் பேட்டரி கார் சேவை பாதிக்கப்பட்டது. நல்வாய்ப்பாக பக்தர்கள் கிரிவல பாதையில் கிரிவலம் சுற்றாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், திடீரென கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மூச்சிக்கல், நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வாட்டி வதைத்த நிலையில், திடீரென சுவாமிமலை, பட்டீஸ்வரம், நாச்சியார் கோவில், அம்மாசத்திரம், அசூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே, வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் கடும் பாதிப்படைந்தனர். இந்நிலையில், அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வாலாஜாநகரம், எருத்துக்காரன்பட்டி, தவுத்தாய்குளம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை கொடித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென புளியம்பட்டி, அத்திகானூர், வேலம்பட்டி, அகரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மாவட்டத்தில் வெப்ப தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், மதுரை மாநகர், ஆனையூர், அண்ணாநகர், கோரிப்பாளையம், பீ.பீ.குளம், கலைநகர், வள்ளுவர்காலனி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக, மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்