எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 22ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பான சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
வரும் 17, 18 ஆகிய தேதிகளில் பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வரும் 19ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,
வரும் 20ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. வரும் 21, 22ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.