எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருவதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக முழு கொள்ளளவை எட்டி வருகின்றன.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதன் காரணமாக அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு நேற்று 98 ஆயிரத்து 934 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று 1 லட்சத்து 31 ஆயிரத்து 746 கனஅடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. கதவணையில் இருந்து காவிரி ஆற்றிற்கு 33 மதகுகள் வழியாக 1 லட்சத்து 30 ஆயிரத்து 276 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேலும், தென்கரை வாய்க்காலில் 650 கனஅடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கனஅடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் வழியாக 20 கனஅடியும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 21 ஆயிரத்து 355 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதில், காவிரி ஆற்றில் 27 ஆயிரத்து 783 கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 92 ஆயிரத்து 662 கனஅடி நீரும், கிளை வாய்க்கால்களில் 910 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பிலும், பொதுப்பணித்துறை சார்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.