எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையின் பல்வேறு இடங்களில் காலை முதலே இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
சென்னையில் 2 நாட்களாக ஓய்ந்திருந்த மழை நேற்றிரவு மீண்டும் பெய்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலையும் சென்னையில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் பில்லர், கே.கே.நகர், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை கொட்டித் தீர்த்ததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, வங்கக்கடலில் வரும் 22ம் தேதி மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் கடந்த 15ம் தேதி பலத்த மழை பெய்தது. ஒரு சில இடங்களில் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பொழிந்தது. இதனால், புளியந்தோப்பு, பட்டாளம், கொளத்தூர், உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமையும் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், மழை பெய்யாததால், ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.