சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது - பெண் ஆசிரியர் மயக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31ம் தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.

இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்றும் திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும் விளம்பர அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக  கைது செய்தனர். 

கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சில ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்த போலீசார் 4 மணி நேரமாக பேருந்திற்குள் அடைத்து வைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர். ஒரே பேருந்தில் அளவுக்கு அதிகமான ஆசிரியர்களை அடைத்து வைத்துள்ளதால் மூச்சு திணறல் ஏற்பட்டும், இயற்கை உபாதைகளுக்கு மறுப்பு தெரிவித்ததால் சில ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். கைதானவர்களை மண்டபத்தில் அடைக்காமல் பேருந்தை நடுவழியில் நிறுத்தி வைத்து உணவு, தண்ணீர்க்கூட வழங்காமல் போலீசார் அடக்குமுறையில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Night
Day