சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகம் எதிரில் பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்து பேருந்தில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே 500க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியில் ஈடுபட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் பேனரை அகற்ற முயன்றதால் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத விளம்பர அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை என பல்வேறு துறைகளைச் சார்ந்த 300 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில்  ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Night
Day