எழுத்தின் அளவு: அ+ அ- அ
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட மல்லாக்கோட்டை தனியார் கல்குவாரிக்கு 91 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளு மெட்டல் என்ற பெயரில் தனியார் கல் குவாரி இயங்கி வந்தது. அங்கு கடந்த மே மாதம் 20ம் தேதி 400 அடி பள்ளத்தில் விதிகளை மீறி பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்கு துளையிடும் பணி நடந்தது. அப்போது, பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, குவாரி உரிமையாளரின் சகோதரர் கமலதாசன், குவாரி பொறுப்பாளர் கலையரசன், மேற்பார்வையாளர் ராஜ்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில், கல் குவாரி உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், உரிமம் காலாவதியான நிலையில், வேறொரு இடத்திற்கு வாங்கிய அனுமதியை வைத்து குவாரி 8 மாதமாக இயங்கியது தெரியவந்தது. இந்நிலையில், விதிகளை மீறி சட்ட விரோதமாக கற்களை வெட்டி எடுத்ததற்காக 91 கோடி ரூபாய் அபராதம் செலுத்த தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஸ் வெங்கட் வட்ஸ் உத்தரவு பிறப்பித்தார்.