திருப்புவனம் காவல்நிலைய மரண வழக்கு - சிபிஐக்கு மாற்ற புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார், காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தது அதிர்ச்சி அளிப்பதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்து, இளைஞரின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,   சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலைய மரண வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமாரை  போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகியிருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்த மனிதாபிமானமற்ற செயலை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், இந்த கொடுமைக்கெல்லாம் திமுக தலைமையிலான கையாலாகாத அரசுதான் காரணம் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கடுமையாக சாடியுள்ளார். 

திமுக தலைமையிலான அரசு ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பதிலாக, அவர்களை கொன்று குவிக்கும் அரசாக இருக்கிறது என்றும் இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும் எனவும் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவல்துறையினர் தாக்கியதால்தான்  உயிரிழந்துள்ளார் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகிவிட்டதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

உயிரிழந்த அஜித்குமார் காவலர்களால் தாக்கப்படவில்லை என்றும், அவர் கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டதால்தான் இறந்தார் என்றும் முதல் தகவல் அறிக்கையில் இருந்ததாக செய்தி வெளியானது - திமுக தலைமையிலான அரசு இந்த வழக்கை மூடி மறைக்கப்பார்த்த நிலையில், தற்போது காவலாளி அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி, இந்த விளம்பர அரசு மக்களை ஏமாற்றிவந்த நாடகம் அம்பலமாகிவிட்டது என புரட்சித்தாய் சின்னம்மா விமர்சித்துள்ளார். 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், திமுக தலைமையிலான அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர். மக்களைக் காக்கவே காவல்துறை - அவர்களே மக்களைத் தாக்கினால், அதன் நோக்கமே இல்லாது போய்விடும் என்று கருத்து தெரிவித்ததோடு, ஏன் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை? - அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள்? - ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யவில்லை? -

இந்த வழக்கை மாநில அரசு நீர்த்துப் போகும் வகையில் செயல்பட்டால் நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பிக்க நேரிடும் - ஏன் இந்த வழக்கில் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? அரசு தரப்பின் நடவடிக்கையும் போதுமானதாக தெரியவில்லை - சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது என்பது அதுவும் மாநில காவல்துறை தானே என்ற அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியுள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை 31 லாக்கப் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன - மக்களை பாதுகாக்கவேண்டிய அரசே அவர்களை கொன்று குவிக்கும் வகையில் செயல்படுவது மனிதாபிமானமற்றது என புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான அரசு மக்களை காக்கவேண்டிய காவல்துறையை, ஆளுங்கட்சியினரின் ஏவல்துறையாக மாற்றியதுதான் அவர்களது ஆட்சியின் ஒரே சாதனை என குற்றம் சாட்டியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, திமுகவினர் இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு மக்களை ஏமாற்ற ஓரணியில் தமிழ்நாடு என்று மார்தட்டி கொள்வதாகவும், ஆனால் திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் ஓரணியாக திரண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்றும், எனவே, மக்களை ஏமாற்றும் காலம் இனிமேல் இல்லை என்பதை திமுகவினர் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

திமுக அரசிடமிருந்து, திருப்புவனம் காவல்நிலைய மரண வழக்கில் ஒரு வெளிப்படையான, நியாயமான விசாரணையை கண்டிப்பாக எதிர்பார்க்கமுடியாது - எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து, விரைந்து விசாரித்து, அஜித்குமாரின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

Night
Day