எழுத்தின் அளவு: அ+ அ- அ
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் ஜஸ்டின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரையும் விசைப் படகுடன் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறை பிடிக்கப்பட்ட 5 மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வரும் இலங்கை கடற்படையினர் விசாரணை முடிந்ததும், மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவர்கள் 9 பேர் டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். 9 மீனவர்களும் புத்தளம் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 9 மீனவர்களையும், நாட்டுப்படகுடன் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் புத்தளம் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணை முடிந்ததும் மீனவர்கள் புத்தளம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.