எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆவணங்களை முறையாக ஆராயாமல் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருப்பதாக, ராமதாஸ் ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் அருள் குற்றம் சாட்டியுள்ளார்.
பாமக தலைவர் என குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவரிக்கு கடிதம் எழுதிய தொடர்பாக ராமதாஸ் ஆதரவாளர்கள் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து முறையீடு செய்தனர். தேர்தல் ஆணையத்தில் பாமக எம்.எல்.ஏ அருள், பொதுச் செயலாளர் முரளி சங்கர், சட்ட ஆலோசகர்கள் அருள் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள், ராமதாஸ் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்றும் அதை தேர்தல் ஆணையமே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஆனால் அந்த விவகாரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். பாமக என்பது ராமதாஸ் தலைமையிலே செயல்பட்டு வருகிறது என்பதால், கட்சியின் மாம்பழச் சின்னம் ராமதாஸ் அணிக்கே என்பதை தேர்தல் ஆணையரிடம் எடுத்துரைத்ததோடு இதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய பாமக எம்எல்ஏ அருள், ராமதாஸ் தரப்பில் 12 கடிதங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதப்பட்ட போதிலும் அதற்கான ஒப்புகை சான்று கிடைக்கவில்லை என்பதை தேர்தல் ஆணையரிடம் எடுத்துரைத்ததாகவும், பதவிக்காலம் முடிந்ததை மறைத்து அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியுள்ளது என்ற விவகாரத்தையும் தலைமை தேர்தல் ஆணையரிடம் கூறியதாக தெரிவித்தார். தேர்தல் ஆணையம் ஆவணங்களை முறையாக ஆராயாமல் அன்புமணிக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் குற்றம் சாட்டிய அவர், தேர்தல் ஆணையம் தங்களுக்கு ஒரு நல்ல முடிவை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.