பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் - பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது 75வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து, பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முதல் நபராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலமாக பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு, நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தனது 75வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி என்றும், உங்களை போலவே இந்தியா - அமெரிக்கா இடையே விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் தானும் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எனது நண்பர் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனவும், இந்தியாவுடன் இவ்வளவு வலுவான நட்பைப் பகிர்ந்து கொள்வதில் ஆஸ்திரேலியா பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தின் நம்பமுடியாத பங்களிப்புக்கு நாங்கள் ஒவ்வொரு நாளும் நன்றியுள்ளவர்களாக இருப்பதாக கூறிய அல்பனீஸ், விரைவில் உங்களைச் சந்திக்கவும், இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார்.

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், என் நெருங்கிய நண்பர் பிரதமர் மோடிக்கு 75வது பிறந்தநாளுக்கு, என்னிடமிருந்தும், நியூசிலாந்து மக்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் என தெரிவித்தார். நமது இரு நாடுகளும் பாதுகாப்பையும் செழிப்பையும் அடைவதை உறுதிசெய்யும் அதே வேளையில், தொலைநோக்குப் பார்வையை அடைய இந்தியாவுடன் நியூசிலாந்து மேலும் கூட்டு சேருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார்.


Night
Day